Monday, April 6, 2020

25 பூந்தோட்ட நகர்

விளையாட்டு போல, நாங்கள் இப்போது குடி இருக்கும் எங்கள் கோவை வீடு கட்டி, இருபத்து மூன்று வருடங்கள் வேகமாக ஓடி விட்டது . எங்கள் பையனை விட ஒரு வயது கம்மி . சுமார் நாற்பது வருடம் வாடகை வீட்டில் இருந்த அனுபவத்தால் ,சொந்த வீடு அப்பாவின் மிக பெரிய கனவாய் இருந்திருக்கும், அவர் அப்போது வாய் திறந்து சொன்னதில்லை, இப்போது புரிகிறது.

நான் கல்லூரி படிப்பு முடித்த சமயம் 89ல் அவரின் சேமிப்பை வைத்து என் பெயரில் ஒரு கிரவுண்டு நிலம் வாங்கியிருந்தார்.இப்போது நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது ,எது என் பெயரில் வாங்க தூண்டியது என்று.

திருமணம் முடிந்து பையன் பிறந்த பிறகு 97ல் வேலையும் சம்பளமும் நிலையாக இருந்ததால் என்னை வீடு கட்டலாமா என்று கேட்டதற்கு நான் என்ன பதில் சொன்னேன் என்று இன்றும் ஞாபகமில்லை, ஆனால் எதிர்மறையாக என்று நினைக்கிறேன் .

அலுவலகத்தில் எனது மேலதிகாரி மணி சார் ஒரு நாள் அவரின் அறைக்கு அழைக்க, சென்று பார்த்தால் அங்கு அப்பா . என்னப்பா, உன் அப்பா வீடு கட்டலாம் என்றால் ஒன்னும் பேச மாட்டேன் என்கிறாயாமே என சிரித்தபடி வினவ . நான் என்னிடம் ஒன்றும் சேமிப்பு இல்லை வீடு கட்ட சுமார் ஐந்து லட்சமாவது ஆகுமே எப்படி புரட்டுவது என இழுத்தேன் , உடன் அப்பா , என் ரிடர்ய்மென்ட் பணம் ரெண்டு லட்சம் உள்ளது அப்புறம் கொஞ்சம் வங்கி கடன் வாங்கினால் போதுமே எனக்கூற ,மணி சாரும் வங்கி கடனுக்கு ஆபிஸ் சம்மதம் வாங்கி தருவதாக,சம்மதித்தார் .

நானும் நண்பர்களுமே வீட்டு பிளான் மற்றும் கம்பி டிசைன் செய்தோம். அப்ரூவ்டு சைட் மற்றும் பஞ்சாயத்து என்பதால் எளிதாக ப்ளான் அப்ப்ரூவல் ஆயிற்று பேங்க் லோன் வாங்குவதில் பயங்கர சிக்கல் .அதுபற்றி தனி கதை எழுதும் அளவிற்கு அது பெரிய கதை . மூலபத்திர நகல் கிடைக்கபெற நாய் படாத பாடு . வீட்டில்அருகில் இருந்த மலையாளி வைத்திருந்தும் நகலை பிரதி எடுக்க தரவில்லை . செல்போன் மற்றும் சமூகவலைதளம் இல்லா காலங்களில் பதினாறு பத்திர நகல்களை சம்மந்தப்பட்ட ஐந்து நபர்களிடம் தேடி வாங்குவதற்குள் ஆறுமாதம் ஆகிவிட்டது. ஒருவழியாக ஒரிஜினல் பத்திர அடமானம் மூலம் பதினாலு சதவீத வட்டியில் லோன் சேங்சன் ஆயிற்று.

ஒரு நல்ல நாளில் பூமிபூசை போட்டு வீடுகட்டுவது ஆரம்பமாயிற்று . சாமான்கள் நாங்களே வாங்கி லேபர் காண்ட்ராக்ட்டில் கட்டுவதாக ஏற்பாடு .பக்கத்து காலி இடத்தில் ஒரு ஒரு சிமெண்ட் கொடௌன் மற்றும் என்னுடைய மாமா முழுப்பொறுப்பையும் கவனித்துகொள்ள அங்கேயே தங்கி கொண்டார்.அப்பாவும் அம்மாவும் தினமும் டவுனில் எங்கள் வாடகை வீட்டில் இருந்து உணவு சமைத்து எடுத்து வந்து வீடு கட்டுவதை பார்த்து கொண்டனர்.

வீட்டை கட்டி பார் கல்யாணம் செய்து பார் என்று சும்மாவா சொன்னார்கள் . எங்களுடையது களி மண் பூமி , அஸ்திவாரம் பன்னிரண்டு அடி போனது , மேலும் கட்டிய கழிவு நீர் தொட்டியில் விரிசல் மற்றும் என்னுடைய அலட்சியத்தால் பதினாறு அடி கொண்ட ஆறு பீம்களில் கான்க்ரீட் கம்பி அளவு பத்தாமல் விரிசல் மேலும் தென்மேற்கு மூலையில் ஒரு பில்லர் இறங்கிவிட்டது. இவையெல்லாம் குடும்பத்தில் அனைவருக்கும் பயங்கர சிரமத்தை தர . கட்டிட தவறுகளை சரி செய்தது தனிக்கதை .

இந்நிலையில் , பில்டிங் எஸ்டிமேட் ஐந்து லட்சத்தில் இருந்து ஆறரை லட்சமாக உயர்ந்தது . அப்பாவுடைய , பணம், லோன் பணம் காலியாக, என்னுடைய கைச்செயின், பையனின் அரைஞான் கொடி , மனைவியின் டாலர் செயின் சில மோதிரங்கள் என ஒவ்வொன்றாக விற்றும் பத்தவில்லை . மேலும் சில நகைகள் கூட்டுறவு வங்கிக்கு அடமானம் போயின. ஒருவழியாக வீட்டை மட்டும் முடித்து, சுற்று தளம் , காம்பவுண்டு சுவர் , முன் கேட் முடிக்க வசதியில்லாமல் ,வீட்டை கிரக பிரவேசம் செய்தோம் ..

புதியவீட்டில் குடிபெயர்ந்து , ஒரு வருடம் ஓடியபின் , கோவை குண்டுவெடிப்பின் காரணமாக எங்கள் கம்பெனி வேலைகள் நின்றுபோக , பம்பாய்க்கு மாற்றலாகி போக நிர்வாகம் கட்டயப்படுத்த, பிடிக்காமல் வேலையை ராஜினாமா செய்தேன் . ஆறுமாதம் சரியான வேலை இல்லை நடுவில் கடன் அட்டையில் வாங்கிய கடன்தொகை கட்டமுடியாமல் மிரட்டல் , குடும்ப செலவிற்கு பத்தும் பத்தாமலும் சுமார் இரண்டு வருட வாழ்க்கை .

வெறிகொண்ட மாதிரி இன்டர்வியூவிற்கு படித்து கஷ்டப்பட்டு எல் அன்ட் டி பணி கிடைத்தது கஷ்டம் கொஞ்சம் குறைந்தது. இருந்தும் பேங்க் லோன் என்னை சிரமப்படுத்த, மதுரையில் எங்களுக்கு இருந்த அருமை இடத்தை சொற்ப விலைக்கு விற்று என் லோனை அப்பா அடைத்தார்.ஒருவழியாக வீட்டு கடன் சுமையும் பொருளாதார சுமையும் முடிவுக்கு வந்தது . அப்பா ஒரு ஆளாகவே அப்போதைய என் கடன் பிரச்சனைகளை சரி செய்தார்

நடுவில் கோவையைவிட்டு சென்னைக்கு குடிபெயர்ந்து விடலாம் என எங்களின் வீட்டை விற்பதற்கு ஏற்பாடெல்லாம் செய்து விட்டேன் , ஒரே பையன் என்பதால் பெற்றோருக்கும் விறுப்புவெறுப்பு இல்லாமல் சம்மதிக்க நல்லவேளையாக நண்பர் ஒருவர் அறிவுறுத்தலின் பேரில் யோசனையை தள்ளி போட்டோம்.பின்னர் நான் வேலை நிமித்தமாக வெளிநாடு சென்று விட சுமார் பதினாறு ஆண்டுகள் எங்கள் வீட்டில் நான் தங்கவே இல்லை , இதோ கடந்த சுமார் ஒன்றை ஆண்டுகளாக எங்கள் வீட்டில் தொடர்ந்து இருந்து வருகிறேன் .

வீடு என்பது செங்கலும் கலவையும் கான்க்ரீட்டும் பெயிண்டும் கொண்டு கட்டப்பட்ட ஒரு கட்டிடம் , ஆனால் அதில் உள்ள இல்லம் என்பது ,குடும்பங்களின் பந்தம் பாசம் நேசம் சுகம் துக்கம் கோபம் அழுகை ஆற்றமை நிம்மதி ஆற்றல் என பல உணர்வுகளை க்ரகித்துகொண்டு வெளியே எதையும் காட்டிகொள்ளாமல், நம்மை காக்கும் காவல் தெய்வம். சிறுவயதில் அப்பாவின் முதுகை பிடித்துகொண்டு தூங்கினாற்போல் ,அப்பாவினால் எங்களுக்கு கிடைத்த எங்கள் இல்லச்சுவற்றை விரல்களால் வருடியபடி தினமும் தூங்கிப்போகிறேன்.

லியாகத்ஜி

ராமனுடைய வனவாசம் போல பதினாலு வருடம் ஓடி விட்டது ஆனால் இது நிதர்சனம். எம்பிளாய்மென்ட் விசாவில் முன்பு சேர்ந்து ,2018ல் ஓமானை விட்டு Exit ஆகி டக்கென வருஷம் ஓடிவிட்டது. அதிகாலை கனவில் வந்த ஒரு சிரித்த முகம் பல நினைவுகளை கிளறிவிட்டது.

வளைகுடாவில் நல்ல வேலை கிடைத்து குடும்பத்தை கூட்டி போகும் பாக்கியமும் கிடைத்து , நல்ல வீடும், பர்னிச்சரும் அமைந்து , குழந்தைகளுக்கு பள்ளியில் அட்மிசன் கிடைத்து ,என எல்லாம் அமைந்தும் , லைசென்ஸ் மற்றும் சொந்த கார் இல்லை எனில் , உள்ளங்கையில் தேன்நெல்லி இருத்தும், சாப்பிட முடியாது போலத்தான்

2006 சூளையில் நான் போக பின்னால் ஆகஸ்டில் மனைவி மற்றும் மகன் வர , மேற்சொன்ன வசதி எல்லாம் அமைந்து விட்டது, ஆனால் லைசென்ஸ் மற்றும் கார் கொடுப்பினை இல்லை . இதனால் குடும்பத்தை கோவில் ஹோட்டல் சினிமா சிற்றுலா அடிக்கடி சூப்பர் மார்கட் மேலும் கல்விசாரா இதர கலைகளை பையனுக்கு சொல்லி கொடுப்பது என பல முடியவில்லை

எங்கள் வீடு இருந்த அல்குவேரிலிருந்து ஆபிஸ் சுமார் பதினைந்து நிமிட கார் பயணம் .காலை, மாலை, மற்றும் மதிய இடைவேளை சேர்த்த நாலு முறை போக வேண்டும் . ஒவ்வோருமுறையும் ஒவ்வொருவரை நம்பி இருக்கும் சூழ்நிலை.
PRO, டிரைவர் இல்லா லேப் வேனுக்கு லாரி ட்ரிவரை பிடிப்பது , வொர்க்சாப் போர்மன் மைதீன் , அல்லது வொர்க்சாப் தலைமை பக்க்ஷி என பலரின் தயவுடன் ஒரு ஆறுமாதம் கொடுமையாய் ஓடியது

புதிய நாடு புதிய வேலை புதிய சூழ்நிலை, பலதரப்பட்ட புதிய மக்கள் , என நம்மை அட்ஜஸ்ட் செய்து கொண்டு நம்மை proof வேறு செய்யவேண்டும் இடத்தில் வாகனம் ரொம்ப முக்கியம் ஏனெனில் அலுவல் சம்மந்தமாக பலரையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை. வாடகைக்கார் அதிகம் இல்லா சமயத்தில் அந்த வசதி கம்பெனி செலவில் உபயோகிக்கலாம் என அக்கவுண்டன்ட் அறிவுரைக்கவும் இல்லை

வீட்டுக்கு போய் வர பட்ட கஷ்டங்களை , ஜீஎம் ராகுலிடம் ஒரு நாள் சொல்லி புலம்பினேன். அப்போதுதான் கம்பனி கணக்கில் வாடகை கார் எடுக்கும் விபரத்தை சொல்லிவிட்டு சட்டென நீ ஏன் லியாகத்தை லைசென்ஸ் வாங்கும் வரை உபயோகப்படுத்த கூடாது என கூறிவிட்டு , உடன் டிஸ்பேட்சை அழைத்து உத்தரவிட ,தேவதூதன் போல் வந்தவர்தான் லியாகத் அலி.

படிய வாரிய டைஅடித்த தலை, சுமார் 55 வயது இருக்கும் சிவந்த தோற்றம், நடுத்தர உயரம் ,தாட்டியான உடல்வாகு , எப்பவும் சிரித்த முகம் , டீக்காக டக் பண்ணிய ஷர்ட் பேன்ட், அரைகுறை இங்கிலீஷ் ,நல்லா அரபி மற்றும் நல்ல ஹிந்தி இதுதான் சைட் சூப்பெர்வைசர் லியாகத்.

லியாகத்தின் தலையாய பணிகள் கான்க்ரீட் போடுவதற்கு கஸ்டமர் சைட் ரெடியா என பார்ப்பது , கான்க்ரீட் பம்பை சரியான இடத்தில் நிறுத்த பிளான் பண்ணுவது , மற்றபடி கஸ்டமரின் பிரதிநீதி,கம்பெனி லாரி டிரைவர்கள் ; பம்ப் ஆபெரேட்டர் ,மற்றும் அனைத்து உற்பத்தி குழுவுடன் விவாதிப்பது சிறு சிறு பிரச்சனைகளை சரி செய்வது , விபத்து நடந்தால் கிரேன் மூலம் வண்டியை ஒர்க்க்ஷாப் கொண்டு வருவது யாரவது சிறு குற்றம் செய்து ஜெயிலுக்கு போனால் வெளிய கொணர்வது என நாள் வாரம் விடுமுறை வருடம் முழுவதும் பயங்கர வேலை. மேற்சொன்ன வேலை நடுவில் தினமும் ஐந்து வேலை தொழுது , ஒர்க்கர்ஸ் கேம்பில் மசூதியை அமைத்து முல்லாக்களை ஏற்பாடு செய்து , ரம்ஜான் உண்ணா நோன்பினை அருமையாக கடைபிடித்து போது , ஹஜ் மற்றும் உம்ரா(காரில் ) சென்று வந்த மிக சிறந்த பக்திமான் .

மேற்கண்ட அலுவல் பணி ஊடே என்னை வீட்லிருந்து காலையில் மதியம் அழைத்து செல்வது மீண்டும் வீட்டில் விடுவது என காரில் பயணம் செய்தபடி அரைகுறை ஆங்கிலத்தில் பேசியபடி ரொம்பவும் நெருங்கி விட்டோம்..

ஒரு வருடம் கழித்து நான் லைசென்சு வாங்கிவிட,பிக் அப் டிராப் குறைந்துவிட்டாலும் என்னின் நிறைய பணிகள் லியாகத்தினாலேயே.மகனையும் மனைவியையும் ஏன் சில சமயம் என் நண்பர்களையும் அவர்களின் குடும்பத்தினருக்கும் சாரதியாக இருந்து சில இடங்களில் இருந்து பிக் செய்வது அல்லது சில இடங்களுக்கு டிராப் செய்வது . கரண்ட் பில் மற்றும் தண்ணீர் பில் கட்டுவது. கடையில் சாமன் வாங்கி வருவது தப்பான பொருட்களை மாற்றி வருவது. நான் ஏற்பாடு செய்யும் பல சமூக நிகழ்சிகளுக்கும் வாகன உணவு அமைப்பாளராக இருந்து பல சிறு ஏற்பாடுகள் செய்வது. பல நேரங்களில் எனக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வருவது மொத்தத்தில் எனது இடது கை ஆகி போனார் .

அலுவகத்திலும் பல வாரந்திர உள் அமைப்பு கூட்டங்களில் டெக்னிகல் மற்று மார்கெட்டிங் விசயங்களை லியாகத் இல்லாமல் நான் முடிவு செய்ய மாட்டேன். ஆபிசில் அவர் என மனசாட்சி போலவே செயல் படுவார் இதற்கு பிரதிபலன் என நான் செய்தது மிக மிக குறைவே. ஒருமுறை அவர் சிறிய தவறுக்கு தண்டித்தும் உள்ளேன்

எங்களது பன்னிரண்டு வருட மஸ்கட் நாட்களில் காலத்திலும் அனைத்து விடுமுறை ஏர்போர்ட் பிக் அப் ட்ரோப் அவரே. பையா என்று என் மனைவி அவரை அன்போடு அழைத்த காரணத்தினால் வருட வருடம் விடுமுறையில் இருந்து நாடு திரும்பும் போது ஒரு செட் ட்ரெஸ்சும் ஸ்வீட்டும் கட்டாயம் அவருக்கு .மேலும் எம் மகனுக்கு தேவைப்படும் என்பதற்காக வாங்கி வந்து, நான் மறுத்து ஆப்பிள் IPAD மற்றும் அவன் அங்கு பள்ளி படிப்பை முடித்து இந்தியா திரும்பிய போது விலையுயர்ந்த மொபைல் ஒன்றை பரிசளித்தார் . இச்சமயத்தில் அவரின் பெரிய மகனின் ஷார்ஜா வீட்டில் குடும்பத்தோடு தங்கியது நினைவில் வந்து போனது.

மேற்சொன்ன விஷயங்கள் ஒரு சராசரி சக ஊழியர் செய்யகூடியவையே .ஆனால் இப்பதிவை, நெகிழ்ச்சியாக நான் எழுத காரணம், எங்கள் கம்பெனியில் பணியில் இறந்தோருக்கு மதம் பார்க்காமல் எவ்வித பலனும் எதிர்பார்க்காமல் லியாகத் குழுவின் தலையாய் இருந்த இறந்தவரின் உடலை தத்தம் நாடுகளுக்கு அனுப்பி வைக்க ஆற்றிய அறம் . உடலை மார்ச்சுவரிக்கு ஏம்புலன்சில் அனுப்பி வைத்து விட்டு , பாஸ்போர்டை கேன்கல் செய்து , எம்பால்மிங் மற்றும் சவப்பெட்டி எற்பாடு செய்து , உடலுக்கு டிக்கெட் எடுத்து கடைசிவரை இருந்து அனுப்பிவைத்துவிட்டு என்னை அழைத்து சொல்வது . மேற்சொன்ன பணியில் நானும் கொஞ்சம் பங்குபெற்தால்தான் இன்னும் இறை என்னை காக்கிறார் போலும்.
பலநாள் காரில் பல விஷயங்கள் நங்கள் பேசி கொண்டு போனாலும் ஒருமுறை கூட எந்த சகாயமும் அவர் கேட்டு கொண்டதில்லை. இருவரின் குடும்பத்தை விசாரித்து கொள்வோம் . நீங்க ஏன் சார் பிசினஸ் பண்ணகூடாது என அடிக்கடி கேட்பார் . அவருக்கு தெரியாது நான் அந்தளவு துணிந்தவனில்லை என்று. எதுவும் கேட்டதில்லை ஆனாலும் அவருக்கு ஓரளவுக்கு நன்மை செய்துள்ளேன் என்ற சிறு திருப்தி உள்ளது

மஸ்கட் வேலையை விட்டு, வீட்டுக்கு வந்தபோது கடைசியாக என்னை டிராப் செய்தார், அதற்கு பின்னர் அவரை பார்க்கவுமில்லை பேசவுமில்லை , ஏனென்று தெரியவுமில்லை .

வாழ்நாளில் முழுதும் லியாகத்தை நினைவில் கொள்ள, அம்மை வந்து நான் படுத்திருந்த போது அவர் தினமும் பறித்து வந்த வேப்பிலை மற்றும் பணம் பெறாமல் கொண்டு தந்த இளநீர் போதும் . இதை எழுதிய போது அவரின் பரிசுத்த அன்பை எண்ணி கண் கலங்கியது உண்மை . ஒரு அண்ணன் ஸ்தானத்தில் இருந்து சுமார் பதினோரு வருடம் மஸ்கட்டில் எங்களை பார்த்துகொண்டார் லியாகத் என பெருமையாக கூறிக்கொள்ளலாம்.

ஒருவேளை எங்கள் பந்தம் முந்தைய ஜென்மம் தொடராகவும் இருக்கலாம்.குறுப்பிட மறந்து விட்டேன் லியாகத்ஜி ஒரு பாகிஸ்தானி..




உண்மை

சில உண்மைகள் காயப்படுத்தும்..
ஆனால்,
பொய்களால் திருப்திப்படுத்த நினைக்காதீர்...

Thursday, October 5, 2017

ழாவில் ஒரு வாழ்த்து

உடுமலை மொழியினியர்
ஈன்ற தமிழினியர்
எழில் சொல்ழினியர்
வண்ண தாழையினர்
குழை மிழலையினர்
இயற்கை இழையினியர்
செழுமை யாழினியர்
பழக நற்றமிழர்
பூவை குழலினியர்
செந்தமிழி, தீந்தமிழி
தமிழ் போல் தழைத்து
வளம் கொழிக்க, செழிப்புற,

மகிழ்,வாழ வாழ்த்து...

Thursday, June 1, 2017

நான் படிச்சேன்

1967 திமுக முதன் முதலில் ஆட்சி அமைத்தது. நானும் அந்த வருடம் தான் பிறந்தேன் .70களில், கான்வென்ட்கள்  தமிழகத்தில் மெதுவாக உதயமாகின, அதாவது English  மீடியம் ஸ்கூல்...எல்லா அப்பாக்களையும் ஆசைப்பட்டு என்னையும் ,தாராபுரத்தில், ஆரம்பித்த, முத்து ஸ்கூலில், என்னை LKG (Yes) சேர்த்துவிட்டார், UKGயும் அங்கேதான்.Ba Ba Black sheep, Twinkle Twinkle Little start,Humpty Dumpty.. அப்போதும் இதே.. மதியம் தூங்க வச்சு, சாயங்காலம் பொரியும் பிஸ்கட்டும்  தருவாங்க ... நான் Englsih Medium படிப்பதில் அப்பா அம்மா பாட்டி சித்தப்பா என அனைவருக்கும் பெருமிதம், எங்கே போனாலும் பையன் கான்வேண்டில் படிக்கிறான் என பெருமை கூறி Englishல் எதாவது கேட்க சொல்ல, அனைவரும் என்னை கேட்கும் கேள்வி, What is your Name? பதில்தான் உங்களுக்கு தெரியுமே...

தாராபுரத்தில் இருந்து கோவைக்கு அப்பா மாற்றலாக , என்னை கவுண்டம்பாளையம்  Guild of Service இன் சில்டர்ன்ஸ் ஸ்கூலில் சேர்த்து விட்டனர்.பள்ளியில் என்னை விட  அப்பா சைக்கிள் வாங்கினார்.ஆரம்பத்தில் காலையில் அவரே என்னை பள்ளியில் விட்டு கூடு வர,பின்னர் நாங்களே நடந்து போய் வந்தோம்... கிளாஸ் மேட்ஸ் மொத்தம் பத்தே பேர் அழகிய CO ED பள்ளி அது , ஐந்து ஏக்கர் இருக்கும் எங்கும் மரங்கள்,புளி நாவல் பழ மரமும் உண்டு, புல்வெளி, வெல்வெட் பூச்சி, பொன்வண்டு, ஹெலன் ஹெட்மிஸ்ட்ரெஸ், அழகிய பிரபா மிஸ், நித்தி ,குட்டி,கல்பூ,சுபாபெரியநாயகி, எலும்பு மிஸ் இங்கிலீஷ் டுயுசன், Happy Birtday To you,சாக்லேட்,distribution , ஒரு Birthdayஅப்பா பரிசளித்த Robinson crusoe, கிளாசில் சத்தமாக நாங்கள் பாடிய ,Old MACDONALD had a farm E-I-E-I-O ..இன்னும் காதில் ஒலிக்கிறது.. ஒருமுறை நண்பனுடன் பிளேடு வைத்து சண்டையிட்டு ,கையில் இன்னும் வீரத்தலும்புள்ளது.ஒன்றும் முதல்  ஐந்துவரை அங்கே படிப்பு...இந்த ஸ்கூல் இப்போது இல்லை என்பதில் வருத்தம் ..

6th ஸ்டான்டர்ட்டுக்கு  அரசு உதவி பெறும் ,TARCHSS, முருகன் மில்ஸ்ல்,சேர்த்து விட்டார் அப்பா ,முதன் முதலாக, பள்ளிக்கு பஸ்ஸில் செல்ல ஆரம்பித்தேன்..இதுதான் நான் படித்த கடைசி CO ED ஸ்கூல் ..மிக பெரிய ஸ்கூல் பெரிய விளையாட்டு மைதானம், காலையில் எப்போதும்TMSஇன் முருக பக்திபாடல்கள், PRAYER,  தமிழ் தாய் வாழ்த்து,மாலை,தேசிய கீதம்.. பள்ளி வகுப்புகள், மொத்தம் நாற்பது பேர் , இருபது ரேங்குக்குள் நான். டிபன்பாக்ஸ் சாப்பாடு .தினமும் மதியம் கால்பந்து, , நந்தகோபால் வீட்டில் இருந்து வரும் மதிய உணவுக்கு அடிதடி. பின்னர் அஞ்சு பைசா ஜவ்வரிசி குச்சி ஐஸ்.எலிப்புளுக்கை மிட்டாய்....வகுப்பு குறும்புகள் அடிக்கடி பெஞ்சில் நிற்கவைப்பு, ஒருநாள் பெண் பிள்ளைகள் வெளியேறும் முதல் மணி அடிக்கையில் நானும் போக, அடுத்த நாள்  கிளாசுக்கு வெளிய முட்டி...கோகுல், ஹரி,ஹசிம், ராஜு, சின்ன தம்பி,நண்பர்கள்..

ஏழாவது பாதியில் அப்பாவுக்கு மதுரைக்கு Tranfer,அங்கு தல்லாகுளம் ACHSS எனப்படும் அமெரிக்கன் கல்லூரியின் ஸ்கூல்...மதுரை அடடடா , நம்ம மண், தமிழர் தமிழின் பண்பாட்டை கட்டி காக்கும் சொர்க்க பூமி.கோயில், குளம் கண்மாய், வயல், சல்லிகட்டு, மீன்பிடித்தல், ஏர் ரைபீளில் கொக்கு வேட்டை, கபடி, உலக தமிழர் மாநாடு, திருட்டுத்தனமாக  ஏறிக்குதித்து கால்பந்து ,முதல் சிகரெட்,  நாற்றம் அதை மறைக்க நாங்கள் பட்ட பாடு , நண்பர்களுடன் பார்த்த முதல் சினிமா...ஸ்கூலுக்கு எதிர்வீட்டில் இருந்த கிளாஸ் லீடர்ஸ்சோலைமலை சீனிமலை நெருங்கிய நண்பர்கள், ஷங்கர், சாய்கனேஷ், ஜலீல், மோகன்,கிங்க்ஸ்லீ, ஜான்பால்,வாடகை சைக்கிள், புதூர் பஸ் ஸ்டான்ட், கழக மன்றம், நாகூர் ஹனிபா பாட்டு, கவர்ன்மென்ட் லைப்ரேரி,தங்கம் தியேட்டர், GTex டைலர், அழகர் கோவில், சித்திரை திருவிழா.,பொருட்காட்சி, என சொல்லிகொண்டே போகலாம்..நான் படிக்கும் பொது அங்கு கராத்தே ஹுசைன் அலி , மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பார்...தமிழ் மாஸ்டரும், கணக்கு மாஸ்டர்  மற்றும் ஞாபகம்...தினமும் திருக்குறள் காலை பிரேயரில், ஒருமுறை எனக்கு துப்பார்க்கு, திக்கியது, நினைவிருக்கிறது.பள்ளி அரை நேரம் என்பது கூடுதல் இன்பம், இன்டர்வலில் நாங்கள் வாங்கி உண்ணும் உணவு பற்றி ஒரு பெரிய கதை எழுதலாம் வசந்த காலங்கள்...இந்திரா காந்தி, கலைஞர், எம்ஜியார்,ரஜினி, ஜெயலலிதா  அனைவரயும் அங்கு நேரில் பார்த்துள்ளேன்.பத்தாவதில் முன்னூத்தி நாற்பது. டிப்ளோமா சேர்க்கலாம் என்று அப்பா முயற்சித்தார் , மார்க் பத்தவில்லை பின்னர்  எப்படியோ கஷ்டப்பட்டு 1ST க்ரூப் கிடைத்தது.. ஒருமுறை கிளாஸ் சண்டையில் பெஞ்சை உடைத்து, பைன் கட்டினேன்.. 



+1 பாதியில் , சில காரணங்களால், மதுரையில் இருந்து அப்பா அம்மா  கரூருக்கு குடி பெயர . அங்கே முனிசிபல் ஸ்கூல் வழக்கம் போல் A செக்சன் இங்கிலீஷ் மீடியம்.... அப்பா கரூரில் இருந்து தினமும் திருச்சிக்கு ட்ரெயினில் பணிக்கு போய் வர, அவரை காலை மாலை என இருநேரமும் சைக்கிளில் விடு கூடி வரும் பணியில் நான்... +1 வேறு ஸ்கூலில் இருந்து மாறி வந்ததால்,கொஞ்சமே நண்பர்கள், முரளி , சாமியப்பன் , சிவா,ரஹீம் ரஜினி மற்றும் இளையராஜாவால் இணைப்பு, பல தியட்டர்கள் பல படங்கள், டேப்பில் பாட்டு கேட்பது, Insect Collection , herbarium  , மாமாவின் வெல்ல ஆலை கரும்புச்சாறு , காவேரி, அமராவதி ஆற்று குளியல்  ஊர் சுற்றல் என பொழுது இனிதே கழிந்தது . அப்பாவின் இன்ஜினியரிங் படிப்பு உந்துதலால், +2 A வகுப்பில்  புதிய தோழர்களுடன் சேர்ந்தேன், கிரி, ரவிசங்கர்,பத்மநாபன் ப்ரசென்ன, செந்தில், மொசெஸ், பேரே சொல்லுமே, எப்படிப்பட்டவர்கள் என்று... அவர்களுடன்  நாலு டியூசன் சேர்ந்தேன் ..மேத்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி , பயோலஜி, மேத்ஸ் வாரம் ஐந்து முறை மற்றவை வாரம் மூணு கிளாஸ.., வகுப்பறை கவனிப்பதே இல்லை, இருந்தாலும்,கேள்வி கேட்டால் விடை சொல்லும் அளவு கொஞ்சம் ஞானம் வந்தது...+2 Board Exam ,அப்பா SSLC எழுதிய அதே அறையில் நானும்
. +2 பாஸ், ஆகி,மார்க் பார்க்க,ஸ்கூலுக்கு சென்ற  போது  , அனைவரும் என்னை ஆச்சர்யத்துடன் பார்க்க என்னன்னு  பார்த்தால் 988  மார்க்ககு ஸ்கூல் தேர்ட் ரேங்க்...சிரிக்காதீங்க , முனிசிபாலிட்டி ஸ்கூல்னா அப்படிதான் ...

1984 வரை இருந்த இன்டெர்வியு முறையை , MGR எடுத்துவிட்டு  என்டரென்ஸ் கொண்டு வர, அந்த வருடம் , பழைய ஒன்பது இன்ஜினியரிங் கல்லூரிகளுடன், புதியதாக முப்பது சுயநிதி கல்லூரிகள், ஹ்ம்ம் அத்துடனே நின்றுருந்தால் நன்றாக இருந்திருக்கும்...என்டரென்சில் அதிகம் சோபிக்கவில்லை ,காரணம் என்டரென்ஸுக்கு  சரியான வழிகாட்டுதல் இல்லாமல் போனது ..DOTE அப்பளை செய்து விட்டு காத்திருந்தோம்... நடுவே , அப்பாவின் முயற்சியால்,IIT என்டரென்ஸ் வேறு.. நானெல்லாம் ,IIT பாஸ் செய்ய முடியுமா என்ன ஹா ஹா . இதன் நடுவே நாலு  ஆர்ட்ஸ் காலேஜுக்கு திருச்சியில் விண்ணபிக்க அனைத்தும் கிடைத்தது, அப்போது Bsc கம்பூயுட்டர்,பேமஸ். St Josephல் BSc கணிதம் சேர்ந்துவிட்டேன்... ஹாஸ்டல் கிடைக்காதலால், தனியார் விடுதியில் சேர்த்து  விட, முதன் முதலில் தனி ஜாகை மற்றும் ஹோட்டல் உணவு..அல்சர் வந்துவிட்டது...திருச்சி நல்ல ஊர், பொழுது போக, மலைகோட்டை, ஸ்ரீரங்கம், பர்மா பசார், பல நல்ல ஹோட்டல்கள், நண்பர்கள், சிவராம், செந்தில்,ரகு என மூணு மாதம்  கழிந்தது.பின்னர் அப்பா அம்மா , கரூரில் இருந்து  திருச்சிக்கு வீடு மாற்றி வந்து விட...ஹௌசிங் யூனிட் வாழ்க்கை. .ஒரு நாள் காலேஜில் இருந்து திரும்பிய போது, கரூரில் நாங்கள் தங்கி இருந்த வீட்டுக்காரர் மகன் உட்கார்ந்திருந்தார், விஷயம்  DOTE வெய்டிங் லிஸ்டில் எனக்கு குமரகுருவில் காலேஜ் அட்மிசன் கிடைத்த  தபால்களை கரூரில் இருந்து கொண்டு வந்த தேவ தூதன்...
காலையில் TCக்கு விண்ணபிக்க, என்ன உனக்கும் எஞ்சினீரிங் கிடைச்சிடுச்சா என்று ,சலிப்புடன் அனுப்பி வைத்தார் பாதர்...

அப்பாவுடன் பஸ்ஸில்  பொட்டி தூக்கியபடி , பொள்ளாச்சி வந்து சேர்ந்தோம் ,நாச்சிமுத்து பாலிடெக்னிக் வளாகத்தில் இருந்தது கல்லூரி..ஹாஸ்டல் மகாலிங்கபுரம் மீனாக்ஷி கல்யாண மண்டபம், ஆ இனிய Pollachi Days,  முதல் நாளே சிகரெட் பிடித்தது, தாடி,துரை,மற்றும் நான் நண்பர்களானோம்... இந்திரா மரணம், SO  ஈஸ்வரமூர்த்தி,அவர்களின் நடவடிக்கைக்கு முதல் ஸ்டைரைக், Food poison ஆகி அனைவரும் ஹோச்பிடல் அட்மிட், PAP கேண்டீன்,,மாக்கிநாயக்கன்பட்டி, நண்பர் ரூம்கள், மெஸ்கள், பாலி டெக்னிக் பெண்கள், கேண்டின், லேபுக்கு,NGM காலேஜ், கொத்துபரோட்டா , தேர்முட்டி, விடிய விடிய சீட்டு,பீடி  நல்லப்பா ,துரைஸ், முருகாலயா தியேட்டர்கள், ரஜினி ரசிகர் மன்றம்...மாஸ்டர்ஸ், SO, மகாலிங்கம்சார், கோவிந்தராசுலு,சார், ராஜன் சார்,காஜா சார், கோபால் சார், மணிமேகலை மேடம், வாசுதேவன் சார், பலர் நினைவுக்கு வரவில்லை. நண்பர்கள், சிவராமகிருஷ்ணன், குல்பி, பவழ கண்ணன் , கண்ணதாசன், தாடி செந்தில் ,துரை, ரவி, ரமேஷ், மாமா, ஜேபி, திண்டுக்கல் பிரபாகர்,கல்யான். அசோகன், ஜெய்சக்திவேல்,மோகன்,பாண்டியன்,ஹரி, மகேந்திரன்,செட்டி, சுந்தராஜ்,செல்வராஜு, நடையன், வெங்கிடபதி , ஆரோக்கியராஜ்,மற்றும் Classmates மூன்றே பெண்கள், குழலி, உஷா,நஸ்ரெத்....பொள்ளாச்சி நாட்களை பற்றி ஒரு  நாவல் எழுதலாம் அவ்வளவு இருக்கு..நிறைய எழுதினேன் ,சென்சாரில் , கட் , ஆயிடுச்சுங்க ...மற்றபடி  மூன்று வருடம் பொள்ளாச்சியிலும் பின்னர் நான்காவது வருடம் கோவையில் ஒருவழியாக படிப்பு முடித்து, 70ல் ஆரம்பித்த ஏட்டு கல்வியை 88ல் இனிதே நிறைவு செய்தேன், பிதா ,மாத குரு, நண்பர்கள், துணையுடன்.....
பள்ளி கல்லூரி நாட்கள் தந்த பாடங்கள், அனுபவங்கள், இனிமை நினைவுகள் கடைசி மூச்சு உள்ளவரை மறக்க மாட்டோம் என்பதை அனைவரும் ஒத்துகொள்வீர்கள்...
..


25 பூந்தோட்ட நகர்

விளையாட்டு போல, நாங்கள் இப்போது குடி இருக்கும் எங்கள் கோவை வீடு கட்டி, இருபத்து மூன்று வருடங்கள் வேகமாக ஓடி விட்டது . எங்கள் பையனை விட ஒரு...